- செய்தியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 100 இணையதளங்களை பட்டியலிட்டுள்ளதை மீறி, இது தளங்களின் பட்டியல் அல்ல; கையேடு – இணைய செய்தி கையேடு. இளம் செய்தியாளர்களுக்கும், செய்தி அறிவதில் ஆர்வம் உள்ள எவருக்கும் வழிகாட்டும் நோக்கம் கொண்ட கையேடு. இந்த கையேட்டை இவ்விதம் உருவாக்கியதில் இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இணைய செய்தி வளங்களாக அமையும், இணையதளங்களை பட்டியலிட்டு, விரிவான அறிமுகத்துடன் சுட்டிக்காட்டுவது. செய்திக்கடலில் பயணிக்க இந்த வழிகாட்டுதல் உதவும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், இணையத்தில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய செய்தி சார்ந்த இணையதளங்கள் இவை.
- இன்னொரு முக்கிய காரணம், இணையத்தில் மறக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட கையேடு ( டைரக்ட்ரி) வடிவத்தை மீட்டெடுத்து மறு அறிமுகம் செய்வதாகும். இணையத்தின் துவக்க காலத்தில் பிரபலமாக இருந்த, யாஹூ கையேட்டை இன்று எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
இந்த கையேட்டை அறிந்தவர்கள் கூட, இந்த வடிவம் காலாவதியானதாக நினைத்து விலகிச்செல்லலாம். ஆனால், இணைய கண்டறிதலில் கையேடுகள் சிறந்த வழிகாட்டியாக இருந்தன. யாஹு டைரக்டரி தவிர வேறு சில முக்கிய கையேடுகளும் இருந்தன. ஒரு காலத்தில் கூகுளில் இணையதளங்கள் பட்டியலிடப்பட டிஎம்.ஓ.இசர் எனும் கையேடு முக்கிய அளவுகோளாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
- கூகுள் எழுச்சிக்குப்பிறகு இணைய கையேடுகளுக்கான முக்கியத்துவம் குறைந்தாலும், தேவை குறையவில்லை. புதிய, பயனுள்ள இணையதளங்களை கண்டறிய கையேடுகளே சிறந்த வழி. வெவேறு தலைப்புகளில், பல்வேறு பிரிவுகள் மற்றும் துணை பிரிவுகள் கீழ் தளங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் கையேட்டின் மூலம், தேவையான முக்கிய தளங்களை கண்டறியலாம். அந்த வகையில், இது இணைய செய்தி வளங்களுக்கான கையேடு. இதில் இடம்பெற்றுள்ள செய்தி சார்ந்த தளங்கள் அனைத்தும் கவனமாக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளவை.
- இந்த தளங்களின் தேர்வு தொடர்பாக சில முக்கிய குறிப்புகள்:
இவை முன்னணி தளங்கள் அல்ல. அதாவது அதிகம் அறியப்பட்ட அல்லது அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் எனும் அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை. பெரும்பாலான இணைய பட்டியல்கள், முன்னணி தளங்களையே முன்னிறுத்துவதால் எண்ணிக்கை அடிப்படையிலான அளவுகோள் இந்த தேர்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை. இந்த பட்டியலில், முன்னணி தளங்களும் உண்டு என்றாலும், முன்னணி தன்மைக்காக அவை சேர்க்கப்படவில்லை. சொல்லப்போனால், பரவலாக அறியப்பட்ட முன்னணி தளங்கள் பல இதில் விலக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இவை சிறந்த தளங்களின் பட்டியல் என்றும் கொள்வதற்கில்லை. இந்த தளங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு விதத்தில் சிறந்தவை என்றாலும், தனிப்பட்ட தேர்வு என்பதால், ’சிறந்த’ எனும் அடைமொழியை தவிர்க்கிறேன்.
- ஆனால், தனிப்பட்ட தேர்வு என்றாலும், இந்த தளங்களின் தேர்வில் ஒரு ஆசிரியர் குழுவின் அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. செய்தி தேடலில் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களை அந்த அந்த பிரிவு மற்றும் தேவைக்கு ஏற்ப சுட்டிக்காட்டுவது முதன்மை நோக்கம். அதோடு, இணைய
செய்தி பரப்பில், முன்னணி மற்றும் வர்த்தக நோக்கத்தை கடந்து, பயனுள்ள செய்தி வளங்களை முன்னிறுத்துவம் நோக்கம். இந்த கையேட்டின் மற்றொரு முக்கிய அம்சம், தளங்களின் தேர்வில் இணைய வரலாற்றின் சரட்டை உணரலாம் என்பது தான். 2025 ல் அறிமுகமாகும் கையேடு என்ற வகையில், சமகால அல்லது புதிய தளங்களை மட்டும் கொண்டிராமல், பழைய முக்கிய தளங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், பழைய தளங்கள் தேர்வு இணைய
வளர்ச்சியின் முக்கிய மைல்கற்களை நினைவில் நிறுத்துவதாகவும் அமைகிறது. முதல் இணையதளம் துவங்கி, முதல் வலைப்பதிவு, முக்கிய மாற்று தேடியந்திரம், காலாவதியானாலும் புறந்தள்ள முடியாத தளங்கள் ஆகியவை பட்டியலில் உள்ளன.
- ’இணைய செய்தியாளன்’ என்ற முறையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி நோக்கில் இணையத்தை பயன்படுத்தி வரும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த கையேட்டை உருவாக்கியுள்ளேன். அதைவிட முக்கியமாக, ஏழு ஆண்டுகள் தமிழகத்தின் முன்னணி கல்லூரிகளின் ஒன்றான லயோலா கல்லூரியின் கவுசல் கேந்திரா துறை- டிஜிட்டல் இதழியல் பிரிவில் மாணவர்களுக்கு கவுரவ விரிவுரையாளராக பாடம் நடத்த கிடைத்த வாய்ப்பும், அனுபவமும் இந்த கையேட்டிற்கான தூண்டுகோளாக அமைந்தது. உண்மையில், இந்த கையேடு, முதல் ஆண்டு வகுப்பெடுத்த போது, பாடத்திட்டம் நிறைவில் மாணவர்களுக்கு பரிந்துரைத்த, செய்தியாளர்களுக்கான 25 தளங்கள் பட்டியலின் விரிவாக்கமே.
- இந்த கையேடு முழுவமையானது அல்ல: மாறாக தொடர்ந்து செயல்பாடு தேவைப்படும் கையேடு. இணைய மொழியில் சொல்வது என்றால் இது முன்னோட்ட வடிவம். திருத்தங்களுக்கும், மேம்பாட்டிற்கும் உரியது. இந்த பட்டியலில் விடுபடல்கள் உண்டு. மேலும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய தளங்கள் வேறு பல இருக்கலாம். வாசகர்கள், பயனாளிகள், இதழாளர்கள், இதழியல் பேராசிரியர்கள் பங்களிப்புடன் இந்த கையேட்டில் திருத்தங்கள் செய்து மேம்படுத்த விருப்பம். இந்த கையேட்டை மையமாக கொண்டு, இணைய செய்தி வளங்கள் குறித்து தொடர்ந்து பதிவிடவும் திட்டம். வாசகர்கள், பயனாளிகள் ஆதரவை கோருகிறேன்.